போலீஸ்காரர் என கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகை திருட்டு


போலீஸ்காரர் என கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகை திருட்டு
x

போலீஸ்காரர் என கூறி பெண்ணிடம் நூதன முறையில் 6 பவுன் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 55). இவர் நேற்று மாலை கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் விஜயாவிடம் வந்து, தன்னை ஒரு போலீஸ்காரர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இன்ஸ்பெக்டர் ஜீப்பில் இருப்பதாகவும், தற்போது தான் இங்கு ஒரு நபரை கத்தியால் குத்தி கொள்ளைகாரன் ஒருவன் நகைகளை பறித்து சென்றான்.

அதனால் தான் பாதுகாப்புக்கு அனைவரையும் எச்சரிக்க பஸ் நிலையத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்றார். பின்னர் கழுத்தில் உள்ள நகையை கழற்றி கைபையில் வைத்துக் கொள்ளுமாறு விஜயாவிடம் அந்த நபர் அறிவுறுத்தியுள்ளார். இதனை நம்பி விஜயா தனது 6 பவுன் நகைகளை கழற்றி உள்ளார்.

இதைதொடர்ந்து அந்த நபர், விஜயாவின் கைப் பையை வேகமாக பிடுங்கி அவரது நகைகளை பையில் உள்ளே வைப்பது போல் நடித்து நகைகளை அபேஸ் செய்து விட்டான். அந்த நேரத்தில் விஜயா செல்ல வேண்டிய பஸ் வந்ததால் அவர் உடனே பஸ்ஸில் ஏறி அமர்ந்து, பையில் நகைகளை பார்த்தபோது தன்னை போலீஸ்காரர் என்ற போர்வையில் மர்ம ஆசாமி ஒருவன் பட்ட பகலில் ஆள் நடமாட்டம் உள்ள பஸ் நிலையத்தில் ஏமாற்றியது தெரிய வந்தது.

இந்த நூதன மோசடி சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story