மளிகை கடையில் பணம்-அரிசி மூட்டைகள் திருட்டு
மளிகை கடையில் பணம்-அரிசி மூட்டைகள் திருட்டுபோனது.
துறையூர்:
துறையூைர அடுத்த கலிங்கமுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யம்பட்டி கிராமத்தில் மளிகை கடை வைத்துள்ளவர் கண்ணன். இவர் சம்பவத்தன்று வியாபாரம் முடிந்து, கடையை பூட்டுவிட்டு வீட்டுக்கு சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று காலை அப்பகுதியில் சென்ற மக்கள், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்ததை கண்டு கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவர் கடைக்கு சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 5 அரிசி மூட்டைகள் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று முசிறி துணை சூப்பிரண்டு ஜாஸ்மின் தலைமையில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துச்சாமி, முத்துச்செல்வன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பெருமாள் மலை அடிவாரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மணிமாறன்(22) மற்றும் சஞ்சீவி(24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் செந்தில்குமார்(35) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து மளிகைக்கடையில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 8 மூட்டை அரிசி, 3 மடிக்கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.