ஜவுளி கடையில் பணம்- ஆடைகள் திருட்டு


ஜவுளி கடையில் பணம்- ஆடைகள் திருட்டு
x

கம்பத்தில் ஜவுளி கடையில் பணம் மற்றும் ஆடைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

தேனி


ஜவுளி கடையில் திருட்டு


கம்பம் தாத்தப்பன் குளம் தெருவை சேர்ந்தவர் சையதுஅப்தாகிர் (வயது 43). இவர் எல்.எப். மெயின்ரோட்டில் ஜவுளி கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.


இதனால் அதிர்ச்சியடைந்தவர் கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஆடைகளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதேபோல் அதன் அருகே உள்ள மெத்தைக்கடை, ரெடிமேட் கடை மற்றும் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தது தெரியவந்தது.


கண்காணிப்பு கேமரா


இதுகுறித்து சையது அப்தாகிர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.


அதில் மர்ம நபர் ஒருவர் கடைக்குள் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. சம்பவம் நடந்த இடத்துக்கு மோப்பநாய் பைரவ் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். மோப்ப நாய், கடையில் இருந்து ஓடி போக்குவரத்து சிக்னல், ஓடைக்கரை தெரு வழியாக கம்பம்மெட்டு சாலை பிரிவு வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.


இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருட்டு நடைபெற்ற கடையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபரின் புகைப்படத்தை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.


கம்பம் பகுதியில் ஜவுளி கடையில் திருட்டு மற்றும் அடுத்தடுத்த கடைகளில் திருட முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story