மங்கலம்பேட்டை அருகே கொத்தனார் வீட்டில் பணம் திருட்டு 2 பேர் கைது
மங்கலம்பேட்டை அருகே கொத்தனார் வீட்டில் பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம்,
மங்கலம்பேட்டை அடுத்த ரூபநாராயணநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 32), கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு குடும்பத்தினருடன் தூங்கினார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில், வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், சத்தியமூர்த்தியின் சட்டைப்பையில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை திருடினர். இதற்கிடையே சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சத்தியமூர்த்தி, மர்மநபர்களை பிடிக்க முயன்றார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சத்தியமூர்த்தி துரத்தினார். அப்போது அந்த மர்மநபர்கள், ரூபநாராயணநல்லூர் ஏரி அருகே மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பினர்.
2 பேர் கைது
இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த மோட்டார் சைக்கிள் விருத்தாசலம் புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அரவிந்தசாமி(24) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அரவிந்தசாமியின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர்கள், சத்தியமூர்த்தி வீட்டிலும் பணம் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இந்த நிலையில் மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் கோ.பூவனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 3 பேரை போலீசார் மறித்தனர். அப்போது அதில் ஒருவர் தப்பி ஓடினார். இதையடுத்து 2 பேரை மட்டும் மடக்கிப்பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை கீழ குத்து தெருவை சேர்ந்த முகமது உசேன் மகன் அப்துல் சுல்தான்(26), சென்னையை சேர்ந்த ராமு மகன் விஜய்(20) என்பதும், தப்பி ஓடியவர் லோகேஷ் என்பதும் தொியவந்தது. இதையடுத்து சுல்தான், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், தப்பி ஓடிய லோகேசை தேடி வருகின்றனர்.