இரும்பு கடையில் ரூ.1¾ லட்சம் திருட்டு
திருமங்கலத்தில் பூட்டி இருந்த இரும்பு கடை ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம், 2 தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
திருமங்கலம்,
திருமங்கலத்தில் பூட்டி இருந்த இரும்பு கடை ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம், 2 தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ரூ.1¾ லட்சம் திருட்டு
திருமங்கலம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் சீதாராமன் என்ற மணிகண்டன் (வயது 35). இவர் திருமங்கலம்- மதுரை மெயின் ரோட்டில் இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நள்ளிரவு நேரத்தில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். கூட்டாளிகள் வெளியில் நின்று கண்காணிக்க ஒருவர் மட்டும் கடையின் மேல்புற ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தார். பின்னர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், 2 தங்க நாணயங்களை திருடிக் கொண்டு கூட்டாளிகளுடன் தப்பி சென்றார்கள்.
போலீசில் புகார்
வழக்கம்போல் நேற்று கடையை திறக்க வந்த சீதாராமன் பணம், தங்க நாணயங்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கடைக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் கடைக்குள் மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதனை வைத்து கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.