தனியார் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் தாமிர கம்பிகள் திருட்டு
ஓட்டப்பிடாரம் அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் தாமிர கம்பிகள் திருட்டு போனது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே சாமிநத்தம் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து மர்ம நபர்கள் தாமிர கம்பிகள் திருடி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் தாமிர கம்பிகள் திருடுவதற்காக வந்துள்ளது. அப்போது போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்களை மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தாமிர கம்பிகள் திருட்டு போனது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து ஓட்டப்பிடராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தாமிர கம்பிகள் திருடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.