கார் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு


கார் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு
x

காட்பாடியில் பட்டப் பகலில் கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்து ரூ.5 லட்சம் பணம் மற்றும் லேப்டாப்பை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

வேலூர்

காட்பாடியில் பட்டப் பகலில் கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்து ரூ.5 லட்சம் பணம் மற்றும் லேப்டாப்பை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கார் கண்ணாடி உடைப்பு

காட்பாடி கல்புதூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத். அவருடைய மகன் கார்த்திக். கல்புதூரில் கதவு செய்யும் கடை வைத்துள்ளார். இவர் நேற்று காலை வள்ளிமலை கூட்ரோடு பகுதியில் உள்ள வங்கியில் ரூ.3½ லட்சம் எடுத்துக் கொண்டு சித்தூர் மெயின் ரோட்டில் உள்ள அலுவலகத்திற்கு சென்று அங்கு மேலும் ரூ.1½ லட்சம் பணம் எடுத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார்..

பகல் 2.30 மணிக்கு வி.ஜி.ராவ் நகரில் உள்ள பள்ளி எதிரே காரை நிறுத்திவிட்டு, ரூ.5 லட்சம் பணம் மற்றும் லேப்டாப்பை காரில் வைத்துவிட்டு கார்த்திகி மற்றும் கார் டிரைவர் மோகன்தாஸ் ஆகிய இருவரும் பள்ளியில் நடைபெறும் கட்டிட பணிகளை பார்க்க சென்றனர். சுமார் 20 நிமிடம் கழித்து வந்்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.

ரூ.5 லட்சம் திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் காருக்குள் வைத்த பணம் இருக்கிறதா என்று பார்த்தபோது பையில் வைத்திருந்த ரூ.5 லட்சம் பணம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் கண்ணாடியை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து கார்த்திக் காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டபகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சத்தை திருடிச் சென்ற சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story