கார் பழுதுபார்க்கும் கடையில் ரூ.86 ஆயிரம் திருட்டு
திண்டிவனத்தில் கார் பழுதுபார்க்கும் கடையில் ரூ.86 ஆயிரம் திருட்டு
திண்டிவனம்
திண்டிவனத்தில் மரக்காணம் சாலை கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 43). இவர் திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே கார் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு விஸ்வநாதன் வேலை முடிந்ததும் ரூ.86 ஆயிரம் பணத்தை கல்லா பெட்டியில் வைத்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றாா். பின்னர் நேற்று முன்தினம் காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பின்பகுதியில் உள்ள இரும்பு தகரம் நகர்ந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது இரவு நேரத்தில் யாரோ மர்ம நபர் கடையின் பூட்டை உடைக்க முயன்றபோது முடியாததால் பின்பக்கம் உள்ள இரும்பு தகரத்தை நெம்பி உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.86 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விஸ்வநாதன் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.