கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி-உண்டியல் பணம் திருட்டு
கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி-உண்டியல் பணம் திருட்டுபோனது.
திறந்து கிடந்தது
பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் அருகே ஈச்சம்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தர்மகர்த்தாவாக அதே ஊரை சேர்ந்த இளையராஜா(வயது 43) உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு கோவிலில் மின் விளக்குகளை போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 5.30 மணியளவில் அதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கோவிலின் கதவு திறந்து கிடந்துள்ளது. இது குறித்து அவர் இளையராஜாவிற்கு தகவல் கொடுத்தார்.
நகை-பணம் திருட்டு
இதையடுத்து இளையராஜா அங்கு வந்து பார்த்தபோது, கோவிலின் 'கிரில் கேட்' பூட்டு மற்றும் கோவில் சன்னதி மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே இருந்த அம்மன் சிலையின் கழுத்தில் கிடந்த முக்கால் பவுன் பொட்டு தாலி, லட்சுமிகாசு, மாங்காய் காசு 2, கால் பவுன் குண்டு ஆகியவை அடங்கிய 2 பவுன் நகைகள் திருட்டு ேபாயிருந்தன.
மேலும் கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து கோவிலுக்கு வெளியே வைத்து, அதன் பூட்டை உடைத்து அதில் இருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றதும் தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.