தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நூதன ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் ேசாற்றில் முழு பூசணிக்காயை மறைத்து நூதன போராட்டம் நடந்தது.
நூதன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மொத்தம் 252 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 100 மதிப்பில் நவீன செயற்கை கால்களையும், ஒரு பயனாளிக்கு ரூ.8,526 மதிப்பில் தையல் எந்திரத்தையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர். சீர்மரபினர் நலச்சங்கம், சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள் வாழை இலையில், சோறு மற்றும் முழு பூசணிக்காய் வைத்து, மத்திய அரசை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்தினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கண்டித்தும், அந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல், மத்திய அரசு இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஆர்ப்பாட்டத்துக்கு சமூக நீதி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
கூடையில் மனுக்கள்
இந்து எழுச்சி முன்னணி சார்பில், தேனி அருகே மதுராபுரியில் கோவிலை இடிக்க முயற்சி செய்யும் நபர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
குஜராத் மாநிலத்தில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ததை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு குஜராத் மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு அய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள், ஒரு கூடையில் மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். குறைதீர்க்கும் கூட்டம் நடந்த கூட்டரங்கு வரை அந்த கூடையுடன் அவர்கள் சென்றனர். அப்போது அங்கு இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் விசாரித்தபோது, "விபத்து அபாயத்துடன் நெடுஞ்சாலையில் இயங்கும் தனியார் மதுபான பார், கேரளாவுக்கு இறைச்சிக்காக நாட்டுமாடுகளை கொண்டு செல்வதை தடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், அந்த மனுக்களை கூடையில் போட்டு எடுத்து வந்தோம்" என்று அவர்கள் கூறினர்.
அதுபோல், நாம்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "முல்லைப்பெரியாறு அணையில் ரூர்கர்வ் விதியை ரத்து செய்து நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.