தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு:ஆம்புலன்சில் மனு கொடுக்க வந்த தொழிலாளி


தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு:ஆம்புலன்சில் மனு கொடுக்க வந்த தொழிலாளி
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 5:31 PM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஆம்புலன்சில் மனு கொடுக்க வந்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மனு கொடுக்க, தேனி அருகே பாலார்பட்டியை சேர்ந்த மூவேந்திரன் என்பவர் தனியார் ஆம்புலன்சில் வந்தார். ஆம்புலன்சில் இருந்து ஸ்டெச்சரில் இறக்கப்பட்ட அவர் கையில் ஒரு மனு வைத்திருந்தார். தகவல் அறிந்ததும் அலுவலர் ஒருவர் அங்கு வந்து அவரிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்டார்.

இதுகுறித்து மூவேந்திரன் கூறும்போது, 'நான் தென்னை மரம் ஏறும் தொழிலாளி. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மரத்தில் இருந்து விழுந்ததில் முதுகு தண்டுவட பாதிப்பு ஏற்பட்டது. இதனால் படுத்த படுக்கையான எனக்கு படுக்கைப் புண் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். நான் எனது உறவினர் வீட்டில் ஒத்திக்கு குடியிருந்தேன். 6 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை காலி செய்து விட்டேன். ஆனால் எனது ஒத்தி பணத்தை திருப்பி தரவில்லை. இதை கேட்ட என்னை தாக்கினர். போலீசில் புகார் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் நிலையில் மனு கொடுக்க வந்தேன்' என்றார். ஆம்புலன்சில் தொழிலாளி ஒருவர் மனு கொடுக்க வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story