தேனி மாவட்ட அளவில்கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள்:மாணவ, மாணவிகள் அசத்தல்
தேனியில் கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடந்தன. இதில் மாணவ, மாணவிகள் தங்களின் திறமையால் அசத்தினர்.
கலை பண்பாட்டு திருவிழா
தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளிடம் இருக்கும் தனித்திறனை கண்டறிந்து, அவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. 10 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு போட்டியிலும் 2 பேர் வீதம் 20 பேர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். 8 வட்டாரங்களிலும் மொத்தம் 160 பேர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மாணவ, மாணவிகள் அசத்தல்
மாவட்ட அளவிலான போட்டிகள் தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என தொடர்ந்து 2 நாட்கள் நடந்தன. மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி தொடங்கி வைத்தார்.
இதில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தினர். இசைக்கருவி வாசித்தல் போட்டியில் மாணவ, மாணவிகள் பல்வேறு இசைக் கருவிகளை வாசித்து அசத்தினர். ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.