தென்னம்பாளையம் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படுமா?
பரபரப்பாக காட்சியளிக்கும் இடங்களில் 'மார்க்கெட்'க்கு என தனி இடம் எப்போதும் உண்டு. எந்்த காய்கறிகளை, எந்த கடையில் வாங்கலாம் என தேடி அலைந்து வாங்கும் பொதுமக்கள் இன்றுவரை இருக்கதான் செய்கிறார்கள். சிலர் மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகளை தேர்ந்து எடுப்பதே தனி அழகாக இருக்கும். அப்படிப்பட்ட காய்கறி மார்க்கெட்டின் தற்போதைய நிலைமை பொதுமக்களை கவலை அடைய செய்வதாகவே உள்ளது.
டாலர் சிட்டியான திருப்பூர் மாநகரில் உள்ளூர், வெளியூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலத்தவரும் வசித்து வருகின்றனர். இதனால் திருப்பூரில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். திருப்பூரில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் வாங்கிக்கொண்டாலும், தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதை அதிகம் விரும்புகிறார்கள். அது மட்டுமல்ல ஆங்காங்கே உள்ள சிறிய வியாபாரிகள் இந்த மார்க்கெட்டிற்கு வந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். பொதுமக்களும் தங்களது வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்குகிறார்கள். இதனால் தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதி தினமும் பரபரப்பாக காணப்படும். ஆனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு ஏற்ப மார்கெட் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை.
மார்க்கெட்டுக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குண்டு, குழியுமாக சாலை காணப்படுகிறது. மேலும் திறந்தவெளியில் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்து மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-
புதிய கட்டிட பணி
செல்வகுமார் வியாபாரி (மங்கலம்):-
நான் 1 வருடமாக தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். இந்த மார்க்கெட் அதிகாலை 3 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். தற்போது புதிய கட்டிடம் கட்டப்படுவதால் தற்காலிகமாக கடை அமைத்து இருக்கிறோம். ஆனால் இந்த இடம் நெருக்கடியாக இருக்கிறது. இதனால் காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகள், வாங்கிச்செல்லும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மார்க்கெட்டிற்குள் ஓட்டிவர சிரமம் அடைகின்றனர். இதன்காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே புதிய மார்க்கெட் கட்டிட பணியை விரைந்து முடித்து திறக்க வேண்டும். அதுவரைக்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்.
காய்கறி பை
ஈஸ்வரி (வியாபாரி-பட்டுகோட்டையார் நகர்):-
காய்கறி வாங்க வரும் ஒருசில பொதுமக்கள் பை கொண்டு வருவதில்லை. இதனால் காய்கறிகளை பிளாஸ்டிக் பைகளில் போட்டு தரும்படி கேட்கிறார்கள். ஆனால் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் பயன்படுத்துவதில்லை என்று சொல்லும்போது மற்ற கடைகளில் காய்கறி வாங்கி சென்று விடுகிறார்கள். அதேசமயத்தில் ஒருசில வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளில் காய்கறிகளை வினியோகிப்பதை நிறுத்த வேண்டும். அதற்கு பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் நிறுவனங்களை தடை செய்தால் நன்றாக இருக்கும்.
குண்டும், குழியுமாக
பாபு (முதலிபாளையம், சரக்கு ஆட்டோ ஓட்டுனர்):-
நான் தினமும் சரக்கு ஆட்டோவில் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறிகளை ஏற்றி, இறக்க மதியம் 12 மணி முதல் 2 மணி வரை வருவேன். இந்த மார்க்கெட் பகுதி குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனத்தை ஓட்டுவதற்கு சிரமமாக இருக்கிறது. எனவே மார்க்கெட் வளாகத்திற்கு சிமெண்டு தளம் அமைத்தால் நன்றாக இருக்கும்.
அதேபோல் இந்த மார்க்கெட்டிற்குள் வரும் வாகன ஓட்டிகள் ஒருவழியில் நுழைந்து வேறொரு வழியாக செல்லும்படி செய்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
வெயில், மழை நேரம்
சந்திரசேகர்-ராஜேஸ்வரி (தம்பதி):-
வாரம் ஒருமுறை வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்க தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு வருவோம். வெயில் நேரத்தில் காய்கறிகள் வாங்க வரும்போது நிற்க நிழற்குடை இல்லாததால் சிரமமாக இருக்கும். அதேபோல் மழை நேரத்தில் இந்த மார்க்கெட் வளாகம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கும். அப்போது இந்த பகுதியில் நடப்பதற்கு பொதுமக்கள் கஷ்டப்படுகிறார்கள்.
மேலும் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு சரியான வாகன நிறுத்த வசதி இல்லாததால் காய்கறி கடைகள் முன் நிறுத்துகிறார்கள். எனவே வாகன நிறுத்தமிட வசதி அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
சுகாதார சீர்கேடு
அன்பரசி (திருமுருகன்பூண்டி, பொதுமக்கள்):-
தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்குள் வாகனங்களை கொண்டு வருவதற்கு சிரமமாக இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே தார்ச்சாைல அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். வாகனங்களையும் அவர்களுக்கு வேண்டிய இடத்தில் ஒழுங்கு இல்லாமல் நிறுத்திவிட்டு சென்று விடுகிறார்கள்.
இந்த மார்க்கெட் பகுதியில் காய்கறி கழிவுகளை குப்பைத்தொட்டிகளில் கொட்டுவதற்கு பதிலாக திறந்தவெளியில் கொட்டி வைத்திருக்கிறார்கள். இதனால் அந்த பகுதி துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் மார்க்கெட்டிற்கு வெளியே செல்லும் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. எனவே இந்த மார்க்கெட் பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.