தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா
தைப்பூசத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மாங்காடு,
பிரசித்திபெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைபூசத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்்கான தெப்பத்திருவிழா நேற்று மாலை மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தெப்ப குளத்தில் நடைபெற்றது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை மொத்தம் 3 நாட்கள் நடைபெறும். இந்த தெப்பத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் வெள்ளீஸ்வரர், காமாட்சி அம்மன், வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்கள்.
திருவீதி உலா
அதன்படி நேற்று இரவு வெள்ளீஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பின்னர் காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் காமாட்சி அம்மன், யானை வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகள் அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் கவெனிதா மற்றும் கோவில் பரம்பரை தர்மகர்த்தா மணலி டாக்டர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்்.