சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
உடுமலை,
உடுமலையில் பலத்த மழை பெய்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்
உடுமலையில் பலத்தமழை
உடுமலையில் நேற்றுகாலை வெயில் அடித்தது.மதியம் மேகமூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் திடீரென்று பலத்த மழைபெய்தது.
மழை ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்தது. அதனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று தீபாவளிக்கு ஜவுளிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு கடைகளுக்கு வந்திருந்த பொதுமக்கள் அவசர, அவசரமாக அருகில் உள்ள கடைகளின் மேற்கூரை பகுதிக்கு சென்று நின்றனர்.
மழைநீருடன் கழிவுநீர்
பலத்த மழையினால் மத்திய பஸ்நிலையம் பகுதி, பொள்ளாச்சி சாலை, பொள்ளாச்சி சாலை-திருப்பூர் சாலை சந்திப்பு பகுதிமற்றும் பழைய பஸ்நிலையம் உள்ளிட்டபகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பழைய பஸ்நிலையம் பகுதியில் கழிவுநீர்கால்வாய் நிறைந்து வெளியேறியது. அந்த கழிவுநீர் மழைத்தண்ணீருடன் கலந்து சாலையில் ஓடியது.
வாகன ஓட்டிகள் அவதி
அதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும் சிரமத்திற்குள்ளாகினர். கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மெதுவாக சென்றன. ஆங்காங்கே பள்ளமான இடங்களில் மழைத்தண்ணீர் தேங்கி நின்றது.