குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் ரகங்கள் இருப்பில் உள்ளன
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீடாமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது-
தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். நீடாமங்கலம் வட்டாரத்தில் தற்போது நாற்றங்கால் தயாரிப்பு பணியும், நேரடி நெல் விதைப்பு பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.நீடாமங்கலம் வட்டாரத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பரப்பு 12 ஆயிரம் எக்டேர் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீடாமங்கலம், தேவங்குடி, வடுவூர் மற்றும் கருவாக்குறிச்சி ஆகிய 4 வேளாண்மை விரிவாக்க மையங்களில் குறுவை பருவத்திற்கு ஏற்ற ஏ.எஸ்.டி.-16, கோ-51, டி.பி.எஸ்.-5 ரக சான்று பெற்ற விதைகள் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது.
விவசாயிகள் பயன்பெறலாம்
ஏ.எஸ்.டி.-16 நெல் ரகம் 110 முதல் 115 நாட்கள் கால அளவை கொண்டது. இது, குலை நோய்க்கு எதிர்ப்பு ரகம். கோ-51 நெல் ரகம் 105 முதல் 110 நாட்கள் கால அளவை கொண்டுள்ளது. இது, பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் கொண்டது. மேலும், சாயாத தன்மை கொண்ட நெல் ரகம் ஆகும்.டி.பி.எஸ் 5-, திருப்பதிசாரம்-5 எனப்படும் இந்த நெல் ரகத்தின் கால அளவு 118 நாட்களாகும். இந்த ரகம் சாயாத தன்மை மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. இந்த நெல் ரகங்கள் மற்றும் அதற்கு தேவையான உயிர் உரங்கள், சூடோமோனாஸ், நெல் நுண்ணூட்டம் ஆகியவை அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.எனவே விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் பெற்று அதிக மகசூல் பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.