ரெயில் நிலைய பகுதிகளில் தலைவர்களின் சிலைகள், நினைவுச்சின்னங்கள் கூடாது என சுற்றறிக்கை உள்ளது-மதுரை ஐகோர்ட்டில் தகவல்


ரெயில் நிலைய பகுதிகளில் தலைவர்களின் சிலைகள், நினைவுச்சின்னங்கள் கூடாது என சுற்றறிக்கை உள்ளது-மதுரை ஐகோர்ட்டில் தகவல்
x

ரெயில் நிலைய பகுதிகளில் தலைவர்களின் சிலைகள், நினைவுச்சின்னங்கள் கூடாது என சுற்றறிக்கை உள்ளது -மதுரை ஐகோர்ட்டில் தகவல்

மதுரை


தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தீரன்திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை ரெயில் நிலையத்தின் கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் 15 அடி உயரம், 3 டன் எடையில் 3 மீன்களின் சிலை கடந்த 1999-ம் ஆண்டு நிறுவப்பட்டது. ரெயில் நிலைய சீரமைப்பு பணிகளுக்காக கடந்த சில ஆண்டுக்கு முன்பு மீன் சிலைகள் அகற்றப்பட்டன. பணிகள் முடிந்தும், மீன் சிலைகள் மீண்டும் அங்கு நிறுவப்படவில்லை. இது தொடர்பான வழக்கில், மீண்டும் அதே இடத்தில் மீன்கள் சிலை நிறுவப்பட்டதாக ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், எனது மனு தள்ளுபடியானது. ஆனால், கோர்ட்டில் கூறியபடி மீன்கள் சிலை வைக்கவில்லை. எனவே கோர்ட்டில் தவறான தகவல் தெரிவித்தவர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, எப்போது அந்த சிலைகள் அங்கு நிறுவப்படும் என்றும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ரெயில்வே தரப்பு வக்கீல் ஆஜராகி, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தொழில் வர்த்தக சங்கத்தால் மீன் சிலை வைக்கப்பட்டது. மெட்ரோ ரெயில் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்காக இடம் தேவைப்படுகிறது. ரெயில் நிலைய பகுதிகளில் தலைவர்களின் சிலைகள். நினைவு சின்னங்கள் வைக்கக் கூடாது என ரெயில்வே துறையின் சுற்றறிக்கை உள்ளது. வேறு பகுதியில் மீன் சிலைகள் வைத்துக் கொள்ளுமாறு தொழில்வர்த்தக சங்கத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story