மோதிவிட்டு நிற்காமல் சென்ற பஸ்சை காரால் மறித்தவரால் பரபரப்பு
மோதிவிட்டு நிற்காமல் சென்ற பஸ்சை காரால் மறித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் நோக்கி நேற்று காலையில் ஒரு தனியார் பஸ் வந்தது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓயாமரி அருகே வந்த பஸ் ஒரு காரை முந்தி செல்ல முயன்றபோது, கார் மீது மோதியது. இதைத்தொடர்ந்து தனியார் பஸ் நிற்காமல் அங்கிருந்து சென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த காரை ஓட்டி வந்தவர் பஸ்சை விரட்டி வந்தார். அப்போது, மற்றொரு இடத்தில் பஸ் கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனையடுத்து காரை ஓட்டி வந்தவர் ஓடத்துறை ெரயில்வே மேம்பாலத்தில் பஸ்சை முந்தி சென்று பஸ்சுக்கு முன்பு காரை மறித்து நிறுத்தியுள்ளார். இதில் பஸ் டிரைவர் சுதாரித்து பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும்இந்த சம்பவத்தில் கார் சேதமடைந்தது.
இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.