வீட்டில் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததால் பரபரப்பு
வீட்டில் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூர் கங்காணி வீதியில் வசிப்பவர் பிரபா(வயது 32). இவரது கணவர் வினோத் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் சமையல் செய்வதற்காக கியாஸ் சிலிண்டரை பிரபா திறக்க முயன்றார். அப்போது ரெகுலேட்டரில் இருந்து கியாஸ் அதிகமாக கசிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்தார். இது குறித்த தகவலின்பேரில் உப்பிலியபுரம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் விரைந்து சென்று, கியாஸ் சிலிண்டரை கைப்பற்றி, அதில் இருந்து கியாஸ் கசிவதை கட்டுப்படுத்தினர். இதற்கிடையே வீட்டை சுற்றி கியாஸ் பரவியதால், அந்த வீட்டின் அருகே இருந்தவர்கள் எச்சரிக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக கியாஸ் சிலிண்டர் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது அப்பகுதியில் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.