நாகர்கோவில் அருகேஊருக்குள் புகுந்த மிளாவால் பரபரப்பு


நாகர்கோவில் அருகேஊருக்குள் புகுந்த மிளாவால் பரபரப்பு
x

நாகர்கோவில் அருேக ஊருக்குள் புகுந்த மிளாவால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

நாகர்கோவில் அருேக ஊருக்குள் புகுந்த மிளாவால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்ணீர் தேடி வந்த மிளா

நாகர்கோவில் அருகே உள்ள ஆத்திக்காட்டுவிளை மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் மாலையில் மிளா போன்ற உருவம் கொண்ட விலங்கு ஒன்று அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது. அது அங்குள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் ஆத்திக்காட்டுவிளை ஊராட்சி மன்ற தலைவர் டி.பேரின்ப விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்துக்கு வந்தார்.

மேலும் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு, அந்த விலங்கை அங்கிருந்து விரட்டினர். இதனால் அது அருகே உள்ள முந்திரி தோப்புக்குள் புகுந்தது. இதற்கிடையே இதுபற்றி மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காட்டுக்குள் விரட்டியடிப்பு

உடனே ஆரல்வாய்மொழி வன சரகத்தில் இருந்து வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த விலங்கு வட்டக்கோட்டையில் சுற்றித்திரிந்ததும், அது காட்டு மிளா என்பதும் தெரியவந்தது. இதனிடையே வனத்துறையினர் அந்த மிளாவை பிடிக்க முயன்றபோது, அது அந்த பகுதியில் உள்ள அடர்ந்த காட்டிற்குள் ஓடியது. அதன்பின்பு இரவு 9.30 மணி வரை தேடியும் மிளாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தேடுதல் வேட்டை கைவிடப்பட்டது. ஆனாலும், அந்த பகுதியில் உள்ள மக்கள் நள்ளிரவு வரை தூங்காமல் அந்த மிளா மீண்டும் வருகிறதா? என்பதை கண்காணித்து கொண்டிருந்தனர். ஆனால் வர வில்லை. இதையடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, 'கோடை வெயில் காரணமாக தண்ணீர் குடிக்க, காடுகளில் இருந்து வன விலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கம். அவற்றை பொது மக்கள் தேவையின்றி தொந்தரவு செய்ய வேண்டாம். மீண்டும் இதுபோன்ற விலங்குகளை கண்டால் பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுக்கலாம்' என்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story