குளச்சல் அருகே ஐஸ் கம்பெனியில் இருந்து நச்சுவாயு வெளியேறியதால் பரபரப்பு
குளச்சல் அருகே உள்ள ஐஸ் கம்பெனியில் நச்சு வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குளச்சல்:
குளச்சல் அருகே உள்ள ஐஸ் கம்பெனியில் நச்சு வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமோனியா வாயு கசிவு
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி, வியாகப்பர் சந்திப்பில் தனியார் ஐஸ் கம்பெனி உள்ளது. இந்த ஐஸ் கம்பெனி கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டிக்கிடந்தது.
இந்தநிலையில் நேற்று ஐஸ் கம்பெனியில் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு உரிமையாளர் வந்தார். அப்போது அமோனியா கியாஸ் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்த அறையை அவர் திறந்த போது கியாஸ் சிலிண்டரில் இருந்து அமோனியா வாயு கசிந்தது. அதை சுவாசித்தால் மூச்சுத்திணறல் ஏற்படும்.
தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை
இந்த நச்சுவாயு வெளியேறியதை குறித்து ஐஸ் கம்பெனி உரிமையாளர் குளச்சல் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். கியாஸ் சிலிண்டரில் இருந்த கசிந்த அமோனியா வாயு வெளியே பரவாமலிருக்க பாதுகாப்பு உபகரணங்களால் கட்டுப்படுத்தி சிலிண்டர் வைக்கப்பட்டிருந்த அறையை தீயணைப்பு வீரர்கள் பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வள்ளியூரிலிருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு அமோனியா சிலிண்டரில் இருந்து வாயு கசியாமல் தடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கியாஸ் கசிவை கட்டுப்படுத்தியதால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கப்பட்டது.