கோயம்பேடு திரையரங்கில் 'லியோ' பட டிக்கெட் வாங்க ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு


கோயம்பேடு திரையரங்கில் லியோ பட டிக்கெட் வாங்க ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு
x

கோயம்பேடு திரையரங்கில் ‘லியோ' பட டிக்கெட் வாங்க ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

கோயம்பேடு,

நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) திரைக்கு வந்துள்ள நிலையில் முன்னதாக அனைத்து தியேட்டர்களிலும் திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தது. இந்த நிலையில் காட்சிகள் உறுதியாகாத நிலையில் பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்குவதில் கடும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்படமாட்டாது என அறிவிப்பு பலகையை தியேட்டர் நிர்வாகம் வைத்திருந்தது. இதனையடுத்து தியேட்டருக்கு டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சிலர் அங்கேயே காத்திருந்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு ரோகிணி திரையரங்கில் லியோ படத்திற்கான டிக்கெட் வழங்கப்படுவதாக வந்த தகவலையடுத்து தேன்கூட்டில் இருந்து கிளம்பிய தேனீக்கள் போல் ரோகிணி திரையரங்கை ரசிகர்கள் படையெடுக்க தொடங்கினார்கள்.

ஒரே நேரத்தில் ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் வளாகத்தில் திரண்டதால் டிக்கெட்டுகள் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது

போலீசார் தடியடி

மேலும் ஆன்லைனில் இல்லாமல் நேரடியாக வரும் நபர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்பட்டதால் ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு டிக்கெட்டுகளை வாங்க ஆர்வம் காட்டினர். இதனால் அங்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கோயம்பேடு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு டிக்கெட் வாங்க முண்டியடித்த ரசிகர்களை அங்கிருந்து கலைத்துவிட்டனர். மேலும் கூட்டம் அதிகரித்ததால் கயிறுகள் கட்டி தடுப்புகள் அமைத்து போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

இருப்பினும் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் டிக்கெட்டுகள் வாங்க ஆர்வம் காட்டியதால் அங்கு தள்ளுமுள்ளும், லேசான தடியடியும் நடந்தது. இதனால் திரையரங்க வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. லியோ படத்தின் டிரைலர் காட்சி வெளியிடப்பட்டது முதல் டிக்கெட் விற்பனை செய்வது வரை பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருப்பதும் காலையில் இருந்து காட்சிகள் திரையிடப்பட மாட்டாது என தியேட்டர் நிர்வாகம் தெரிவித்த நிலையில் திடீரென இரவு டிக்கெட் கொடுத்ததால் ஒரே நேரத்தில் ரசிகர்கள் அங்கு திரண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story