தமிழகத்தில் ஜனநாயக போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது


தமிழகத்தில் ஜனநாயக போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது
x

போதை பொருட்களுக்கு எதிராக தமிழகத்தில் ஜனநாயக போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. பேசினார்.

திருவண்ணாமலை

போதை பொருட்களுக்கு எதிராக தமிழகத்தில் ஜனநாயக போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. பேசினார்.

உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட தடகள சங்கத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது:-

ஒழுக்கம் மட்டும் வாழ்க்கையில் கடைபிடித்தால் பல்வேறு நிலைக்கு முன்னேற முடியும். ஒழுக்கத்தை கெடுக்கும் வகையில் இன்றைக்கு போதை பொருட்கள் பலரை ஆட்டிப்படைக்கிறது.

போதை பொருட்களுக்கு அடிமையாகி இன்றைக்கு பல்வேறு குடும்பங்கள் சீர்கெட்டு உள்ளது. இந்த போதை பழக்கத்தால் நண்பர்கள், உறவுகளை நாம் இழக்கிறோம்.

மேலும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக கருத கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். அதனால் போதை பொருட்களுக்கு எதிராக தமிழகத்தில் ஜனநாயக போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கண்காணிக்க வேண்டும்

போதை பொருட்கள் தமிழகத்தில் தயாரிக்கப்படுவதில்லை. அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது.

பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்றக் கூடிய கடமை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உள்ளது. போதை பொருட்கள் பயன்பாட்டால் மாணவர்களின் வாழ்க்கை சிதைந்து விடும். எனவே பள்ளி, கல்லூரி அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

இது ஒரு சமுதாய பிரச்சினை. போதை பொருட்களை பயன்படுத்துவதால் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சீர்கேடுகள் நடைபெறுகிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் கண்காணிக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சரால் தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று உள்ளது. மாநில அரசாங்கம் நடத்த முடியாத சர்வதேச செஸ் போட்டியை தமிழக அரசு நடத்தி உள்ளது.

போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருதுகிறார். ஆன்மிக பூமி என்பதால் திருவண்ணாமலைக்கு நாளுக்கு நாள் வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் காவல்துறையினர் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

ஆசிரியர்கள் நினைத்தால்

திருவண்ணாமலையில் இரவு நேரத்திலும் ரோந்து செல்லும் பணியை தொடங்க வேண்டும். பகல், இரவு நேரங்களில் மக்கள் கிரிவலம் செல்வதால் செங்கம் ரோட்டில் கூடுதலாக கண்காணிக்க வேண்டும் என்பதற்காக கிரிவலப்பாதைக்கு என்று தனியாக போலீஸ் நிலையம் வேண்டும் என்று முதல்- அமைச்சரிடம் கேட்டு உள்ளேன்.

இதில் காவல்துறைக்கு மட்டுமே பணி இருக்கு என்று எண்ணாமல் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் நினைத்தால் இந்த சமுதாயத்தை விழிப்புணர்வு உள்ள சமுதாயமாக மாற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் முன்னிலையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஏற்று கொண்டனர்.

மேலும் சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற போதை பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் பள்ளி மாணவர்கள் காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, உதவி கலெக்டர் வெற்றிவேல், திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் உள்பட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story