அரசு மருத்துவமனையை காணவில்லையென ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு


அரசு மருத்துவமனையை காணவில்லையென ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு
x

அரசு மருத்துவமனையை காணவில்லையென ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர்

குளித்தலை நகரம் மற்றும் பல்வேறு கிராம பகுதிகளில் அரசு மருத்துவமனையை காணவில்லை என்றும் தமிழக அரசே கண்டுபிடித்துக் கொடு என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என்றும் திருடி சென்றவர்களை கண்டுபிடித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை குளித்தலை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய அந்த சுவரொட்டி பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சிகள், சமூக நல இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது. குளித்தலை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரூரில் கொண்டுவரப்பட்ட பின்னர் குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக ஆக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. குளித்தலை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனையாக செயல்படும் என பின்னர் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கட்சிகள் சார்பில் பெயர் பலகை மாற்றும் போராட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்தநிலையில் மருத்துவமனையை காணவில்லை என்று ஒட்டப்பட்ட சுவரொட்டி சற்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் குளித்தலை பகுதியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., மக்கள் நீதி மையம் ஆகிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்டோபர் மாதம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story