நாட்டுப்படகுகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு கடும் கிராக்கி


நாட்டுப்படகுகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு கடும் கிராக்கி
x

விசைப்படகுகளுக்கு தடைக்காலம் அமலில் உள்ளதால் நாட்டுப்படகுகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் மீன் விலை உயர்ந்தது.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

விசைப்படகுகளுக்கு தடைக்காலம் அமலில் உள்ளதால் நாட்டுப்படகுகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் மீன் விலை உயர்ந்தது.

மீன்பிடி தடைக்காலம்

தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இதனால், கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டுப்படகுகள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றன. இவற்றில் குறைவான அளவு மீன்களே கிடைக்கிறது. இதனால் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக ஆரோக்கியபுரம், கோவளம், கன்னியாகுமரி, வாவத்துைற, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் சிறிய அளவிலான நாட்டுப்படகுகளில் பிடித்து வரப்படும் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

விலை உயர்வு

கன்னியாகுமரி வாவத்துறை மீன் இறங்குதளத்தில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் மீன் வாங்க குவிந்தனர். வரத்து குறைவாக இருந்ததால் நேற்று மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் கிலோ ரூ.700-க்கு விற்பனையான வஞ்சிரம் மீன் நேற்று கிலோ 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுபோல் ரூ.250-க்கு விற்கப்பட்ட பாறை மீன் கிலோ ரூ.300-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட விள மீன் கிலோ ரூ.400-க்கும், ரூ. 250-க்கு விற்கப்பட்ட ஊலா மீன் கிலோ ரூ.350-க்கும், ரூ.250-க்கு விற்பனையான சங்கரா மீன் கிலோ ரூ.350-க்கும் விற்பனையானது. விசைப்படகுகளின் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் இன்னும் ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை சற்று உயர்வாகவே காணப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.


Next Story