சில துறைகளில் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைப்பு இல்லை: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து அரசுத் துறை செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து அரசுத் துறை செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அரசுத் திட்டங்கள் தொடங்கப்பட்ட நாள், அதன் வளர்ச்சி, தற்போதைய நிலை உள்ளிட்ட விவரங்களை 'பவர் பாயிண்ட்' மூலம் அரசுச் செயலாளர்கள் விளக்கம் அளித்தனர்.
அனைத்துத் திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3.30 மணிநேரம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் ஆற்றிய உரை வருமாறு:-
ஆட்சி அமைந்து 4-வது கூட்டத்தில் அனைவரையும் ஒருசேரச் சந்திப்பது மிகமிக முக்கியமான ஒன்று. ஒவ்வொருவரும் தனியாகச் செயல்பட இயலாது. ஒன்றோடு ஒன்று இணைந்தவைதான் அரசுத் துறைகள். எனவே ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அடிப்படையாகும். அனைத்துத் துறையும் வளர்ச்சி என்பது நம் இலக்கு. திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும், அமைச்சர்களுக்கும், துறைச் செயலாளர்களுக்கும்தான் இருக்கிறது.
சில திட்டங்களை அறிவிக்கிறோம், ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஆகும் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். நிதி நெருக்கடியில் இருக்கிறோம் என்பது உண்மைதான். அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் தர வேண்டிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை விரைந்து வழங்கி அவற்றை செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.
முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சரால் அறிவிக்கப்படும் திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்தி முடித்தாக வேண்டும். நம்மிடம் ஒருங்கிணைந்த செயல்பாடு உள்ளது. ஆனால் உங்களுக்கும், உங்களுக்கு கீழேயுள்ள அதிகாரிகளுக்கும் அதே ஒருங்கிணைப்பு இருக்கிறதா? என்றால் ஒருசில துறைகளில் இல்லை. அத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததால்தான் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் காலதாமதமும், தொய்வும் ஏற்படுகிறது. அதை சரிசெய்வதற்காக இதுபோன்ற ஆலோசனைக் கூட்டம், கண்காணிப்புக் கூட்டம், திட்டமிடும் கூட்டம், கலந்துரையாடல் கூட்டங்களை உங்களுக்கு கீழேயுள்ள அதிகாரிகளோடு தொடர்ந்து நடத்துங்கள்" என்றார்.