அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று இணை இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று இணை இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.
இணை இயக்குனர் ஆய்வு
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் கர்ப்பிணிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வருபவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க வசதியாக புதிய கட்டிடத்தில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் ஆஸ்பத்திரியில் கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உத்தரவிட்டார். அப்போது மருத்துவ அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-
மருந்து தட்டுப்பாடு இல்லை
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மருந்து தட்டுப்பாடு கிடையாது. தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் திருப்பத்தூர் ஆஸ்பத்திரியில் பாம்பு, நாய் கடிகளுக்கு 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும். தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் ஆஸ்பத்திரி பகுதியில் தண்ணீர் ஏதும் தேங்காதவாறு இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மினசாரம் தடைபட்டால் ஜெனரேட்டர் இயக்கவும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.