குடிநீர் வினியோகத்தில் குறைகள் இருக்கக்கூடாது
கிராமப்பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தில் குறைகள் இருக்க கூடாது என்று சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் வலியுறுத்தினார்.
சிவகாசி
கிராமப்பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தில் குறைகள் இருக்க கூடாது என்று சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் வலியுறுத்தினார்.
பயிற்சி வகுப்பு
சிவகாசி யூனியன் அலுவலகத்தில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமில் 27 கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 4 கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை.
குடிநீர் வடிகால் வாரியத்தின் மாவட்ட நிர்வாக என்ஜினீயர் கென்னடி, உதவி நிர்வாக என்ஜினீயர் கற்பக வள்ளி ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரின் தரம், பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, தண்ணீரில் கலந்துள்ள வேதிப்பொருட்களை அறிந்து கொள்வது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
குறைகள் கூடாது
இந்த பயிற்சி முகாமை தொடங்கி வைத்த யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் கூறியதாவது:-
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள 125 பேருக்கும் முக்கிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் தரமாக இருக்கிறதா? என்பதை நீங்கள் தான் ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வேண்டும்.
இந்த பணி மிகவும் முக்கியமான பணி. அதே நேரத்தில் நீங்கள் ஆர்வத்துடன் இதனை செய்ய வேண்டும். சில இடங்களில் குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதாகவும், தரம் இல்லாமல் இருப்பதாகவும் அவ்வப்போது புகார்கள் வருகின்றன. இதுபோன்ற புகார்கள் இல்லாமல் நீங்கள் சரி செய்து கொடுக்க வேண்டும். வாரம் ஒரு முறை நீங்கள் கண்டிப்பாக தண்ணீரை ஆய்வு செய்து அதன் அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். குடிநீர் வினியோகத்தில் எவ்வித குறைகளும் இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவஆசீர்வாதம், புகழேந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளிராஜன், இளநிலை நீர் பகுப்பாய்வாளர் வினோத்குமார், அமலா லூர்துமேரி, வெங்கடேசன், கார்த்திகா, அஜித், தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.