அரசு பள்ளி கட்டிட மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு


அரசு பள்ளி கட்டிட மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
x

கடமலைக்குண்டு அருகே அரசு பள்ளி கட்டிட மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிரிழையில் தலைமை ஆசிரியை உயிர் தப்பினார்.

தேனி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே மந்திச்சுனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இந்த பள்ளியில் உள்ள பழமை வாய்ந்த வகுப்பறை கட்டிடத்தில் தலைமை ஆசிரியர் மரகதம் வழக்கம்போல குழந்தைகளுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து தலைமை ஆசிரியரின் மேஜை மற்றும் இருக்கை மீது விழுந்தது.

தலைமை ஆசிரியை எப்போதுமே அந்த நாற்காலியில் அமர்ந்து இருப்பார் என்றும், மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுவதற்கு சில வினாடிக்கு முன்பு தான் அதில் இருந்து தலைமை ஆசிரியை எழுந்ததாகவும் கூறப்படுகிறது.

உயிர் தப்பிய மாணவர்கள்

ஒருவேளை, அந்த நாற்காலியில் தலைமை ஆசிரியை அமர்ந்திருந்தால் அவரது தலையில் விழுந்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

இதேபோல் மாணவ-மாணவிகளின் இருக்கையின் அருகிலும் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனால் மயிரிழையில் மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர். தற்போது அந்த வகுப்பறையில் படித்த மாணவ-மாணவிகள் அருகே உள்ள கோவிலில் அமர வைக்கப்பட்டு, ஆசிரியர்கள் பாடம் நடத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

புனரமைப்பு பணி

மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்த வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. சமீபத்தில் பெயரளவில் புனரமைப்பு பணி நடந்ததாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

எனவே ஏழை மாணவ-மாணவிகள் படிக்கிற அரசு பள்ளியில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தை அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story