இளம்பெண்ணுடன் வந்த ெசன்னை வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு
பருவதமலைக்கு இளம்பெண்ணுடன் வந்த சென்னை வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலசபாக்கம்
பருவதமலைக்கு இளம்பெண்ணுடன் வந்த சென்னை வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பருவதமலை
கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம், கடலாடி கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள பருவதமலையில் மல்லிகார்ஜுனேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு மாத பவுர்ணமியன்று உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுமார் 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இம்மலைக்கு ஒவ்வொரு மாதம் பவுர்ணமி மற்றும் வார விடுமுறை நாட்களிலும் புதுச்சேரி மற்றும் சென்னை பகுதியில் இருந்து வாலிபர்கள் ஒரு குழுவாக வருகின்றனர். அவர்களுடன் இளம்பெண்களும் வருகின்றனர்.
இதனால் அவ்வப்போது பருவதமலையில் காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் மலைக்கு வரும் வாலிபர்களுக்கு கஞ்சாவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னை குழுவினர்
இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் மலை மீது செல்பவர்களுக்கு ஆதார் கார்டு கட்டாயம் என போலீசார் மற்றும் வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்திருந்தனர்.
ஆனால் இந்த கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டுள்ள காரணத்தால் அவ்வப்போது சில அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சென்னையை சேர்ந்த ஒரு குழுவினர் ஒரு இளம் பெண்ணுடன் வந்துள்ளதாக கூறப்பட்டது.
ரகளை
இன்று மதியம் அடிவாரத்தில் உள்ள மாதிமங்கலம் பஸ் நிலையத்தின் அருகில் திடீரென அந்த இளம்பெண்ணுக்கும் சென்னை வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது.
இதனை அந்த பகுதியை சேர்ந்த சிலர் தட்டி கேட்டு உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சென்னை வாலிபர்கள் கத்திகளுடன் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த புறகாவல் நிலைய போலீசார் விரைந்து வந்து அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் இது சம்பந்தமாக கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.