கோவில் நிலத்தை மீட்க கோரி போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
கோத்தகிரி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்க கோரி அனுமன் சேனா அமைப்பினர் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்க கோரி அனுமன் சேனா அமைப்பினர் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நில அளவை
கோத்தகிரி அருகே அரவேனு பஜாரில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஊராட்சி அலுவலகம் உள்பட கடைகள் அமைத்து ஆக்கிரமித்து உள்ளதாகவும், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனுமன் சேனா அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தனர். இதையடுத்து நில அளவை செய்யப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி அரவேனு பஜார் பகுதிக்கு சென்று ஆய்வு செய்ததுடன், சர்ச்சைக்குரிய விநாயகர் கோவில், ஜக்கனாரை ஊராட்சி அலுவலகம் மற்றும் அப்பகுதியில் உள்ள கடைகள் அவரது முன்னிலையில் நில அளவை செய்யப்பட்டன.
பேச்சுவார்த்தை
இந்தநிலையில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனுமன் சேனா சார்பில் கவனத்தை ஈர்க்கும் வகையில், விநாயகர் கோவில் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அனுமன் சேனா தலைவர் சிட்கோ ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உள்பட 8 பேர் அரவேனு விநாயகர் கோவில் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர், வருவாய் துறையினர் மற்றும் நில அளவைப் பிரிவு அலுவலர்கள் அனுமன் சேனா நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தாசில்தார் நாளை (அதாவது இன்று) விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதா? என நவீன ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் நில அளவை செய்யப்பட்டு, அதுகுறித்த அறிக்கை வழங்கப்படும். ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருப்பின் உயரதிகாரிகளை அணுகி, நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.