மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு


மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு
x

வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி முன்னிலை வகித்தார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக வழங்கினர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மண்எண்ணெய் பாட்டில்

கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வரும் பொதுமக்களை நுழைவு வாயில் பகுதியில் போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்புவார்கள்.

அப்போது ஒரு பெண் தனது குடும்பத்துடன் வந்தார். அவர்களை போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் மண்எண்ணெய் பாட்டில் ஒன்றை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அதை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணையில் அவர் பெயர் மஞ்சுளா (வயது 42) என்பதும், உடன் வந்தவர்கள் அவரது மகள்கள் என்பதும் தெரியவந்தது.

பின்னர் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

நான் அணைக்கட்டு அருகே பனந்தோப்புபட்டியில் வசித்து வருகிறேன். எனது கணவர் இறந்துவிட்டார். எங்களுக்கு 4 மகள்கள் உண்டு. இந்த நிலையில் குடும்ப சொத்து பிரச்சினை காரணமாக எங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர். எங்கு செல்வது என்று தெரியவில்லை. மேலும் வீட்டில் உள்ள பொருட்களையும் எடுத்து விட்டனர். எங்களது வீட்டை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் உயிர் பாதுகாப்பும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மணல் குவாரி

குடியாத்தம் நல்லூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மாணவர்களின் வசதிக்காக ஆய்வக வசதி ஏற்படுத்த வேண்டும். மேல்நிலைக்கல்வியில் அனைத்து பாடப்பிரிவுகளும் ஆங்கில வழிக்கல்விக்கு அனுமதி வழங்க வேண்டும். எங்கள் பள்ளிக்கு வண்ணம் தீட்டி பல ஆண்டுகள் ஆகிறது. எனவே வெள்ளையடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் அளித்துள்ள மனுவில், மேல்மொணவூர் பாலாற்றில் மீண்டும் மணல்குவாரி அமைப்பதை கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.


Next Story