சாலையில் உலா வந்த கரடியால் பரபரப்பு
சாலையில் உலா வந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து உணவு, தண்ணீர் தேடி வெளியே வரும் கரடிகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் உலா வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோத்தகிரி டானிங்டனில் இருந்து கேர்பெட்டா செல்லும் குறுகிய சாலையின் நடுவே கரடி உலா வந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்து சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர். சற்று நேரம் சாலையிலேயே உலா வந்த கரடி, பின்னர் அருகே இருந்த தேயிலை தோட்டதிற்குள் சென்று மறைந்தது. அதன் பின்னரே வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கரடிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. அவை பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், இவ்வாறு சுற்றித்திரியும் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.