விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் பாகாயத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான கோட்டி என்ற கோவேந்தனை ஒரு வழக்கில் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இந்தநிலையில் அவர் மீது காவல்துறை சார்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல் பரவியது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் திரண்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனை சந்தித்து கோவேந்தன் கைது தொடர்பாக விளக்கி கூறி அவர் மீது மேல்நடவடிக்கையை தவிர்ப்பது குறித்து ஆலோசித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சிறிய கருத்து வேறுபாட்டால் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கில் எதிர்தரப்பை சேர்ந்த புகார்தாரர், நான் கோவேந்தன் மீது புகார் செய்யவில்லை என்று கூறுகிறார். அவர்கள் தரப்பிலும் மாவட்ட சூப்பிரண்டுவிடம் விளக்கி கூறினர் என்றனர். மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.