லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த வருவதாக தகவல் பரவியதால் பரபரப்பு
கம்மாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த வருவதாக தகவல் பரவியது. இதனால் அச்சத்தில் ஊழியர்கள் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்மாபுரம்
வெறிச்சோடிய அலுவலகம்
கம்மாபுரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு கம்மாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி மக்கள் தங்களது சொத்துக்களை விற்கவும், வாங்கவும் பதிவு செய்வதற்காக வந்து செல்கிறார்கள். இதனால் இந்த அலுவலகம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலையில் பத்தி்ரப்பதிவு செய்துவதற்காக பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாலை 4 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்த வருவதாக தகவல் வெளியானது. இதனால் அச்சம் அடைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதன் காரணமாக பத்திரப்பதிவுக்காக காத்திருந்த பொதுமக்களும் அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்றனர். இதனால் சார் பதிவாளர் அலுவலகம் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
புரளி
நீண்ட நேரமாகியும் லஞ்ச ஒழிப்பு போலீசார் யாரும் அங்கு செல்ல வில்லை. அதன் பின்னரே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த வருவதாக கிடைத்த தகவல் புரளி என்பது அனைவருக்கும் தெரியவந்தது.
இதன் பிறகே அலுவலக ஊழியர்களும், பத்திர எழுத்தர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதுகுறித்து கம்மாபுரம் சார்பதிவாளர் (பொறுப்பு) சந்திராவிடம் கேட்டபோது, ஊழியர் ஒருவருடன் நான் களப்பணிக்காக வெளியில் சென்று விட்டேன். லஞ்ச ஒழிப்பு துறையினர் வருவதாக எனக்கு எந்த தகவலும் தெரியாது. அலுவலகத்தில் ஒரே ஒரு ஊழியர் மட்டும் பணியில் இருந்தார். அவரும் மாலை 5.30 மணிக்கு அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விட்டார். லஞ்ச ஒழிப்பு துறையினர் வருவதை அறிந்து நாங்கள் வெளியேறி விட்டதாக கூறப்படுவது தவறான தகவல் என்றார். கம்மாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தப்போவதாக வெளியான புரளியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.