வாழை கன்றுகளை நட முயன்றதால் பரபரப்பு


வாழை கன்றுகளை நட முயன்றதால் பரபரப்பு
x

சேரம்பாடி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வாழை கன்றுகளை நட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

பந்தலூர்,

சேரம்பாடி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வாழை கன்றுகளை நட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டும், குழியுமான சாலை

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே சோலாடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அவசர தேவைகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், ஆஸ்பத்திரி செல்லவும் சேரம்பாடிக்கு வந்து செல்கின்றனர். சோலாடி-சேரம்பாடி இடையே உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் சாலை குளம்போல் மாறி உள்ளது.

இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சேரங்கோடு ஊராட்சி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், நோயாளிகள் அவதியடைந்தனர். பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட கமிட்டி உறுப்பினர் பாபு தலைமையில் வாழை கன்றுகளை நட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

வாழை கன்றுகள்

மேலும் சாலையை சீரமைக்காததை கண்டித்து குண்டும், குழிகளில் வாழை கன்றுகளை நட முயன்றனர். அவர்களை சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தனர். மேலும் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் தெரிவித்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியினர் தெரிவித்தனர்.


Next Story