பிரியாணியில் வண்டு கிடந்ததால் பரபரப்பு
பிரியாணியில் வண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் சிவகாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது நண்பரான துரைப்பாண்டியுடன் ராமநாதபுரத்திற்கு குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்தார். நேற்று பிற்பகலில் ஆஸ்பத்திரி வேலை முடிந்து ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு சென்ற சுரேஷ் தனது நண்பருடன் சேர்ந்து பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார். பாதி சாப்பிட்டு கொண்டிருந்தபோது பிரியாணியின் நடுவில் கருப்பு கலரில் பெரிய வண்டு ஒன்று இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கடையில் இருந்தவர்களிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்தார்களாம். பின்னர் சுரேஷ் உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி உணவு பாதுகாப்பு அதிகாரி தர்மர் அங்கு சென்று வண்டு கிடந்த பிரியாணியை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் கடையில் இருந்த எண்ணெய், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அனைத்தையும் சோதனையிட்டார். வண்டு கிடந்ததாக கூறப்பட்ட பிரியாணியை முழுவதுமாக கொட்டி அழிக்க கடையினருக்கு உத்தரவிட்ட அதிகாரி கடையை சுத்தமாகவும், சுகாதாரமும் பராமரிக்க வேண்டும், உணவு பொருட்களை கவனத்துடன் சமைத்து பரிமாற வேண்டும் என அறிவுறுத்தினார்.