அரசு ஆஸ்பத்திரியில் நடமாடிய கரடியால் பரபரப்பு
கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் நடமாடிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி பஸ் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரியில் ஆண்கள் உள் நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு பகுதியில் தெரு நாய்கள் நீண்ட நேரம் குரைத்து கொண்டே இருந்தன. இதனால் சந்தேகமடைந்த நோயாளிகள் வெளியே வந்து பார்த்தபோது, வளாகத்தில் கரடி நடமாடி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் கரடி அங்கிருந்து வெளியே உள்ள புதருக்குள் சென்று மறைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடந்த சில நாட்களாக குடியிருப்புகள் நிறைந்து காணப்படும் கோத்தகிரி கடைவீதி பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் கரடிகள் நடமாடி வருவதால் வனத்துறையினர் கண்காணித்து, கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.