தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு


தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
x

சேப்ளாநத்தம் ஊராட்சியில் தனி ரேஷன் கடை அமைக்க கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த சேப்ளாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட சீராங்குப்பம், செங்கால்பாளையம், சேப்ளாநத்தம் தெற்கு, மேற்கு காலனி மற்றும் கிழக்கு காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக உய்யக்கொண்டராவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் சீராங்குப்பம் மற்றும் சேப்ளாநத்தம் தெற்கு பகுதியில் 2 பகுதி நேர ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. சேப்ளாநத்தம் கிழக்கு மற்றும் மேற்கு காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று பெரும் சிரமங்களுக்கு இடையே பொருட்களை வாங்கி வருகிறார்கள்.

மேலும் முதியோர், கர்ப்பிணிகள் தொலைவில் உள்ள கடைகளுக்கு சென்று வர முடியாத நிலை உள்ளது. ஆகவே காலனி பகுதி மக்கள் தங்களது பகுதியில் தனியாக ரேஷன் கடை அமைக்க கோரி நேற்று ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலிபழனிசாமி தலைமையில் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை தாசில்தார் வேல்முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி உங்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்த கலைந்து சென்றனர். அப்போது பழனிசாமி, ஊராட்சி செயலாளர் ரமேஷ், பத்மநாபன், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story