பஸ் வசதி கேட்டு கலெக்டரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
பஸ் வசதி கேட்டு கலெக்டரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா திருமாந்துறை ஊராட்சி தி.கீரனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். இதையடுத்து, வருவாய் துறை சார்பில் 142 பயனாளிகளுக்கு ரூ.76 லட்சத்து 37 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.31 ஆயிரம் மதிப்பீட்டில் தையல் எந்திரம் மற்றும் சலவை பெட்டிகளும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு 60 ஆயிரம் மதிப்பீட்டில் திருமண உதவி தொகையும், ஊரக வளர்ச்சி துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடுகளும் என மொத்தம் 312 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 16 லட்சத்து 94 ஆயிரத்து 417 மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பின்னர், அருகே உள்ள குளக்கரையில் பனை மேம்பாடு திட்டத்தின் மூலம் கரை முழுவதும் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து கலெக்டர் திரும்பி சென்றபோது அவரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பஸ் வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும், உடல்நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பெண்கள் சாலையில் நடந்து செல்ல பெண்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்ததால் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.