பெரம்பலூரில் பலத்த மழை
பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது.
கொட்டித்தீர்த்தது
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து பெரம்பலூரில் மதியம் 2.30 மணியளவில் விட்டு விட்டு மழை பெய்தது.
பின்னர் 3 மணியளவில் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
கழிவுநீர் கலந்து...
மழைநீருடன் கழிவு நீர் கலந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.