அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்
உலக மகளிர் தின விழா ஆண்டுதோறும் மார்ச் 8-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2012 முதல் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தின விழா கொண்டாட்டத்தின்போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு "அவ்வையார் விருது" தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூகநலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும். எனவே இதற்கு தகுதியான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (http://awards.tn.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 10.12.2022 ஆகும். இறுதி நாளைக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.