27 நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து செயல் இழக்க செய்தனர்


27 நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து செயல் இழக்க செய்தனர்
x

ஆற்காட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து தந்தை- மகன்பலியான வீட்டில் கைப்பற்றப்பட்ட 27 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் வெடிக்கவைத்து செயலிக்க செய்தனர்.

ராணிப்பேட்டை

தந்தை- மகன் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிளைவ் பஜார் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் முருகன் (வயது 42). இவரது மகன் பகவதி (21). இவர்கள் கடந்த 12-ந்் தேதி காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அவரது மகன் பகவதி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் முருகன் வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் 27 நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

செயலிக்க செய்தனர்

இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து சென்னையில் உள்ள வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான குழுவினர், கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை ஆற்காடு அடுத்த தாஜ்புரா பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் வெடிக்க வைத்து செயல் இழக்க செய்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story