ஆத்தூரில் பரபரப்பு: ஓட்டை பிரித்து டாஸ்மாக் கடைக்குள் இறங்கிய திருடன்-பணம் இல்லாததால் ஏமாற்றம்


ஆத்தூரில் பரபரப்பு: ஓட்டை பிரித்து டாஸ்மாக் கடைக்குள் இறங்கிய திருடன்-பணம் இல்லாததால் ஏமாற்றம்
x

ஆத்தூரில் ஓட்டை பிரித்து டாஸ்மாக் கடைக்குள் இறங்கிய திருடன், அங்கு பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்

ஆத்தூர்:

மதுபானக்கடை

ஆத்தூர் காந்திநகர் செல்லும் வழியில் குஞ்சா நாயக்கர் காலனி பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த கடையில் விற்பனையாளர்கள் சீனிவாசன், சுப்பிரமணியன் மேற்பார்வையாளர் ரத்தினம் ஆகிய 3 பேர் பணியில் இருந்தனர்.

பின்னர் அன்று இரவில் 3 பேரும் கடையை பூட்டி விட்டு விற்பனை பணத்தை எடுத்து சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று நண்பகல் 12 மணிக்கு அவர்கள் கடையை திறக்க வந்தனர்.

அப்போது கடையின் பின்புறம் ஓடுகள் உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி நடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கடையின் மேஜை டிராயரில் பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த சில்லறை காசுகள் அப்படியே இருந்தது தெரியவந்தது.

திருட்டு முயற்சி

மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கடையின் ஓட்டை பிரித்து இறங்கி திருட முயன்றதும், அங்கு எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. அரைக்கால் சட்டையும், பனியனும் முகத்தில் மாஸ்க் (முக கவசம்) அணிந்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அரசு டாஸ்மாக் மதுபானக்கடையில் திருட்டு முயற்சி ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.

இந்த சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story