தொடர் திருட்டு வழிப்பறி சம்பவங்கள்
உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி நடைபெற்று வருவதைத் தடுத்து நிறுத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
உடுமலை உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக வீடு புகுந்து திருட்டு, சாலையில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு என சமூக விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கருதுகிறது. உடுமலை நகரம் மற்றும் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலைமையும், பொதுமக்கள் மத்தியில் பதட்டமும், அச்சமும் நிலவுகிறது. உதாரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி உடுமலை கணக்கம்பாளையம் கணேசபுரத்தில் வீடு புகுந்து நகைகள் மற்றும் ரூ.17 ஆயிரம் கொள்ளை, கடந்த ஜனவரி 24-ந்தேதியன்று உடுமலை காந்திநகர் தனியார் பள்ளி அருகில் ஒரு வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து 78 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.கடந்த 12-ந்தேதி உடுமலை காந்திசவுக் பகுதியில் 3 கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கடந்த 13-ந்தேதி தனியார் பள்ளி அருகில் வயதான பெண் ஒருவரிடம் 3 பவுன் சங்கிலி பட்டப் பகலில் பறித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
சட்டம்-ஒழுங்கு
இதுபோல கடந்த ஜனவரி 24-ந்தேதி மடத்துக்குளம் தாலுகா நரசிங்காபுரத்தில் செட்டியார் மில்லில் 10 டன் இரும்புக் கம்பி உள்ளிட்டவை வெட்டி திருடப்பட்டுள்ளன. அதே தேதியில் மடத்துக்குளம் கருப்பசாமி புதூர் பகுதியில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பம்ப் ஓஸ்கள், கேபிள் ஒயர்கள் விவசாய தோட்டத்தில் திருடப்பட்டுள்ளது. இது தவிர பல திருட்டு சம்பவங்கள் உடுமலை, மடத்துக்குளம் தாலுகா காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்துள்ளன. அத்துடன் கடந்த 2 வருடங்களுக்கு முன் நடந்த பல திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டறியப்படாமல் உள்ள நிலை இருக்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் நடத்துவோர் மத்தியில் மிகுந்த பயமும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் தகுந்த பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடருமானால் சட்டம்-ஒழுங்கு கெடவும், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக சுட்டிக்காட்டுகிறோம். எனவே திருட்டு வழிப்பறிகளில் ஏற்படும் சமூக விரோதிகளை உடனுக்குடன் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும், ஏற்கனவே நடந்துள்ள திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் காவல்துறை விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறுஅந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.