திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்
பனிமூட்டம்
தாளவாடியை அடுத்த திம்பம் மற்றும் ஆசனூர் பகுதியில் நேற்று காலை பனிமூட்டமாக இருந்தது. இந்த பனிமூட்டம் பகல் 11 மணி வரை காணப்பட்டது. இதனால் திம்பம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர். குறிப்பாக சாலையின் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி பனிமூட்டம் இருந்ததால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திம்பம் மலைப்பாதை வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், தங்களுடைய வாகனங்களில் இருந்தபடி மலைப்பகுதியின் அழகை ரசித்தவாறு சென்றனர்.
மேலும் தாளவாடி மலைப்பகுதி முழுவதும் மேகமூட்டம் சூழ்ந்து உள்ளதால் இருள் சூழ்ந்தது போல் காட்சி அளித்தது. இதேபோல் தலமலை, கேர்மாளம், குளியாடா, மாவள்ளம் ஆகிய பகுதிகளிலும் பனிமூட்டம் காணப்பட்டது.