(செய்தி சிதறல்) தண்ணீர் என நினைத்துரசாயனம் குடித்த தொழிலாளி சாவு
தண்ணீர் என நினைத்து ரசாயனத்தை குடித்த தொழிலாளி இறந்தார்.
தண்ணீர் என நினைத்து ரசாயனத்தை குடித்த தொழிலாளி இறந்தார்.
பந்தல் தொழிலாளி
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 58). பந்தல் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பால்பண்ணை பகுதியில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு பாட்டிலில் 'தின்னர்' என்ற ரசாயனம் இருந்துள்ளது. தண்ணீர் என்று நினைத்து அதை எடுத்து மணி குடித்துவிட்டார்.
இதனால் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவரை வீட்டில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
*திருச்சி ஸ்ரீரங்கம் இனாம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (59). இவர் காந்திமார்க்கெட் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காய்கறி வாங்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
ரூ.1,000 பறிக்க முயற்சி
*திருச்சி ஏர்போர்ட் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (48). சம்பவத்தன்று முல்லைநகர் பகுதியில் இவர் நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (32) என்பவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,000 பறிக்க முயன்றார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மணல் கடத்தல்
*திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் ஊராட்சி காவிரி புதுஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி கடத்தி வந்த மனுநீதி என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொரு மாட்டு வண்டி உரிமையாளரை தேடி வருகின்றனர்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மீது வழக்கு
*திருச்சி புத்தூர் 4 ரோடு பகுதி மற்றும் இ.வி.ஆர். சாலையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில் எங்கே எனது வேலை என்ற மாநாடு தொடர்பாக அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் மீது உறையூர் போலீசார் மற்றும் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரதமருக்கு அஞ்சல் அட்டை
*காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம். பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளதை கண்டித்து மணப்பாறை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் சார்பாக மத்திய அரசுக்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்பட்ட அஞ்சல் அட்டைகளை மணப்பாறை-திண்டுக்கல் ரோட்டில் உள்ள தபால் நிலையத்தில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் அனுப்பினார்கள்.