ஜூன் மாத நூல் விலையில் மாற்றமில்லை
திருப்பூரில் ஜூன் மாத நூல் விலையில் மாற்றமில்லை. 5 மாதங்களாக நூல் விலை உயராமல் இருப்பது பின்னலாடை தொழில்துறையினரை நிம்மதியடைய செய்துள்ளது.
பின்னலாடை தொழில்
பனியன் தொழில் நகரான திருப்பூரில் பருத்தி ஆடைகள் உற்பத்தி நடக்கிறது. பின்னலாடை உற்பத்திக்கு பருத்தி நூல் முக்கிய மூலப்பொருளாகும். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஆர்டர்களுக்கு பனியன் உற்பத்தியாளர்கள் மொத்தமாக நூல் எடுத்து ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நூல் விலையை மாதந்தோறும் 1-ந் தேதி நூற்பாலைகள் அறிவிப்பது வழக்கம்.
நூல் விலை மற்றும் முக்கிய மூலப்பொருட்களின் விலை அடிப்படையில் ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நூல் விலை அபரிமிதமாக உயர்ந்ததால் புதிய ஆர்டர் எடுத்து செய்வதில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டினார்கள். பனியன் தொழில் மந்த நிலையை அடைந்தது. அதன்பிறகு நூல் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருப்பதால் பனியன் ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது.
நூல் விலையில் மாற்றமில்லை
இதனிடையே நேற்று ஜூன் மாதத்துக்கான நூல் விலை குறித்து அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த மாத நூல் விலையே தொடரும் என்று நூற்பாலைகள் அறிவித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. அதன்பிறகு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதத்துக்கான நூல் விலையும் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தொடர்ந்து 5 மாதமாக நூல் விலை மாற்றமில்லாமல் உள்ளது. இது பின்னலாடை உற்பத்தியாளர்களை நிம்மதியடைய செய்துள்ளது. புதிய ஆர்டர்களை தயக்கமின்றி எடுத்து செய்ய உதவும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதன்படி ஒரு கிலோ கோம்டு ரகம் 20-ம் நம்பர் நூல் ரூ.255-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும் விற்பனையானது.
செமி கோம்டு நூல் 20-ம் நம்பர் ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ.255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ.285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.