திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர் அருகே நூதன முறையில் மோசடி செய்த இளம்பெண்ணிடம் இருந்து பணம், நகைகளை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே நூதன முறையில் மோசடி செய்த இளம்பெண்ணிடம் இருந்து பணம், நகைகளை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இளம்பெண் மோசடி
திருச்செந்தூர் அருகே காயாமொழி ராமநாதபுரத்தை சேர்ந்த 34 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள பல பெண்களிடம் தனக்கு வீடு கட்டுவதற்கும், மருத்துவ செலவிற்கும் என்று கூறி பணம் மற்றும் நகைகளை கடனாக வாங்கியுள்ளார். மேலும் மகளிர் சுய உதவிகுழு மூலம் அப்பகுதியில் உள்ள பெண்கள் பெயரில் சில தனியார் நிதி நிறுவனங்களில் அவர் கடன் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அவர் ரூ.80 லட்சம் பணம் மற்றும் 60 பவுன் நகைகளை அப்பகுதியை சேர்ந்த 25 பெண்களிடம் கடன் என்ற பெயரில் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பணம் மற்றும் நகைகளை மோசடி செய்து விட்டு திடீரென இளம்பெண் தலைமறைவாகி விட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்
இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, திருச்செந்தூர் தாசில்தார் ஆகியோரிடம் தலைமறைவான இளம்பெண்ணை பிடித்து பணம் மற்றும் நகைகளை மீட்டுத்தரக் கோரி மனு கொடுத்தனர். இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பெண்கள் முற்றுகை
உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர், அவர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.