உத்வாகநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
திருமண்ஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குத்தாலம்:
திருமண்ஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உத்வாகநாத சுவாமி கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரியில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற இந்த கோவிலில் சுவாமி, அம்பாளை தரிசித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் திருமணம் கைகூட வேண்டி நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வதும், திருமணம் கைகூடியதும் தம்பதி சமேதராய் கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்து செல்வதும் வழக்கம்.
சிறப்புமிக்க இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 25-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கல்யாணசுந்தரேஸ்வரர் சுவாமி மாப்பிள்ளை கோலத்தில் திருஆபரணங்கள் அணிந்து அலங்காரத்தில் காசி யாத்திரைக்கு திரு எதிர்கொள்பாடி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
திருக்கல்யாணம்
தொடர்ந்து கோகிலாம்பாள் கல்யாண சுந்தரேஸ்வரர் மாலை மாற்றும் உற்சவம் நடந்தது. பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் சுவாமி அம்பாளுக்கு பாலால் கால் கழுவி, பட்டாடையால் துடைத்து, பச்சைபுடி சுற்றி பெண்கள் நலுங்கிட்டனர். தொடர்ந்து ஹோமம் வளர்க்கப்பட்டு கன்னிகாதானம் செய்யப்பட்டது.
பின்னர் பட்டாடை சாத்தப்பட்டு திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணாகுதி செய்யப்பட்டு சுவாமி அம்பாளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு அலங்கார தீபம் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் கிராமமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.